rudrateswarar

rudrateswarar

திங்கள், 29 ஏப்ரல், 2013

திருநாவுக்கரசு நாயனார் புராணம் -1

                                    ஓம் நமசிவாய


திருநாவுக்கரசுநாயனார்புராணம் -1

                       "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட 
                       திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன்"


அவதார தலம்          -திருவாமூர் 
முக்தி தலம்               -திருப்புகலூர் 
குருபூசை திருநட்சத்திரம் -சித்திரை சதயம்
04-05-2013 சனிக்கிழமை 


திருமுனைப்பாடி நாடு வளம் பொருந்திய நாடு  சிவபெருமானின் உண்மை நெறியறத்தை உலகத்திற்கு அருளும் பொருட்டு அப்பர் சுவாமிகளும்  சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருவவதாரஞ் செய்த நாடு 
திருமுனைப்பாடி நாடு அது ஒன்றே போதும் அதன்  பெருமைக்கு 

அந்நாட்டிலேதிருவாமூர் எனும் ஊரிலே வேளாண்குடியில்  புகழனார் மாதினியார் தம்பதிகளுக்குமுதலில் திலகவதி 
என்றபெண் மகவும்  பிறகு மருள்நீக்கியார் என்ற
ஆண்மகவும் பிறந்தனர் 

திலகவதியாருக்குமணமுடிக்க கலிப்பகையார் என்ற 
வேளாண் குலத்தலைவருக்கு நிச்சயித்தனர்
திருமணம் முடிக்க  கருதிய காலத்தில் அந்நிய படையெடுப்பின் காரணமாக போர் செய்ய கலிப்பகையார் 
சென்றார் புகழனாரும்நோய்வாய்ப்பட்டு விண்ணுலகம் 
சேர்ந்தார் .மாதினியாரும் கணவரைத்தொடர்ந்து
விண்ணுலகம் எய்தினார்போருக்குசென்ற கலிப்பகையார் 
வீர சுவர்க்கம் எய்தினார் அது கேட்டதிலகவதியார்தாமும் 
உயிர் விட துணிந்தார் தம்பியார் மருள்நீக்கியார் 
தடுத்தார்சுற்றம் யாரும் இல்லாத தம்பியின் நிலை கண்டு 
மனம் மாறினார்அணிகலன்தவிர்த்து வெண்புடவையுடன் 
எல்லா உயிர்களுக்கும் கருணை புரிந்து சிவசிந்தையுடன் வாழ்ந்தார் 

மருள்நீக்கியார் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் சோகங்களால் பாதிக்கப்பட்டார் நிலையாமையை உணர்ந்தார் அறங்கள் புரிந்தார்
இம்மாயவாழ்க்கையை வெறுத்தார் கொல்லாமைக்குள் 
மறைந்துறையும் சமண சமயஞ்சார்ந்தார் பாடலிபுத்திரம் சென்று சமணப்பள்ளியில் சேர்ந்தார் 
அங்குசமணக்கலைகள் பயின்று புத்தர்களை வாதில் 
வென்று தருமசேனர் என்ற தலைமை குருவானார் 

தம்பியின்செயல்கண்டு மனம் வருந்திய திலகவதியார் 
சுற்றம் துறந்து திருவதிகைவீரட்டம் சென்று திருமடம் 
அமைத்து சிவசின்னம் அணிந்து திருத்தொண்டு
புரிந்து வந்தார் நாள்தோறும் இறைவனிடம் தம்பியை 
பரசமய படுகுழியில் இருந்து மீட்டுத்தர விண்ணப்பம் செய்தார் இறைவரும்அவரின் வேண்டுதலுக்கு கருணை
கொண்டு முற்பிறவியில் செய்த நல்ல தவத்தில் சிறிது வழுவிய  தொண்டரையாளும் பொருட்டு  மருள்நீக்கியாருக்கு  சூலை நோய் அருளினார்
சூலையின் கொடுமை தாங்கமாட்டாமல் தவித்தார். 
சமணர்கள் தங்களின் மந்திரதந்திரம் எல்லாம் செய்தும்  முடியாமல் கைவிட்டார்கள்.மனந்தளர்ந்தமருள்நீக்கியார்  தமக்கையின் நினைவு வந்து சமையல்காரன்
மூலம்  தன் நிலையை சொல்லி அனுப்பினார்  திலகவதியாரோ தான்அங்கு சமணப்பள்ளிக்கு வர இயலாது  என்று சமையல்காரனிடம் சொல்லிஅனுப்பினார்  அது கேட்ட மருள்நீக்கியார் திருவருள் கூடும்காலம் 
எய்தியதால் புன்சமயதொடர்பு விடுத்து தமக்கையார் 
தாள்மலர் சாரத்துணிந்தார் .அவ்வெண்ணம் தோன்றியதுமே சிறிது அயர்வு நீங்கியது உடுத்த 
பாயையும் குண்டிகையையும் பீலியையும் ஒழித்து 
வெண் ஆடையுடித்தி தனது அந்தரங்கமானவேலைக்காரன்  தோள் மீது கையை ஊன்றி சமண குண்டர்கள்   அறியாவண்ணம் இரவில் புறப்பட்டு திருவதிகை அடைந்து 
தமக்கையார் திருமடஞ் சேர்ந்து தன் துன்பம் நீக்கியருள 
விண்ணப்பம் செய்தார் 

திலகவதியார்கருணைகொண்டு சிவனருளைபோற்றி 
பணிந்தால் பாவம் தீரும் என்று திருநீற்றை பஞ்சாக்கரம் 
ஓதியளித்தார்அகத்திருளும் புறத்திருளும் நீங்கும் அந்நேரம் 
திருப்பள்ளிஎழுச்சி பாடும் பொழுது புரமெரித்தபுண்ணியரது
திருக்கோயிலை வலம் வந்து வணங்கினார் .
தம்பிரான் திருவருளால் தமிழ்மாலைகள்சாற்றும் உணர்வு  அவருக்கு வந்தது உடனே திருவாய் மலர்ந்தருளி

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடியேன்அதிகைக்கெடிலவீரட்டானத்துறைஅம்மானே
                                

என்றுதிருப்பதிகம்  பாடி திருவருளில் மூழ்கினார் .
அப்போது இனி திருநாவுக்கரசு என்ற நாமத்தால்  ஏழுலகும் ஏத்தப்பெறுவாய் என்று வானில்  ஓர் அமிர்த ஒலி திருவருளால் எழுந்தது

சூலைவலிவிரைந்து நீங்கியது திருநாவுக்கரசர் திருநீறும் 
கண்டிகையும் புனைந்து நெஞ்சு அஞ்செழுத்து நினைக்கவும் வாக்கு தமிழ்ப்பதிகம்  பாடவும் காயம்  உழவாரப்பணி செய்யவும் முக்கரணங்களாலும் சிவத்தொண்டு செய்தார் திலகவதியார் திருவருளை 
நினைந்து தமது தவம் பலித்தது என்று மனம்  மகிழ்ந்து சிவமூர்த்தியை தொழுதார்

சமணர் கொடுமை       

திருநாவுக்கரசர்சிவநெறி சார்ந்து திருவருள் பெற்று இடர் 
நீங்கிய செய்தி சமணர்கள்அறிந்து புன்மையே புரியும் 
அவர்கள் மனம் பொறுக்கவில்லை அனைவரும் ஒன்று கூடி அரசனிடம் சென்று தருமசேனர் தமது 
தமக்கையார் சைவ சமயத்தில் இருப்பதால் தாமும் அதைசார 
வேண்டும் என்று கருதி சூலைவலி என்றும் அது  எதனாலும் தீரவில்லை என்றும் பொய்யாக நடித்து நம் சமயம் விடுத்து சைவசமயம் சார்ந்து தெய்வநிந்தை 
புரிந்தார் என்று கூறினார்கள்  நன்நெறி விலகிய பல்லவமன்னன் இவர்கள் கூறிய  தீயவனை தண்டிக்கவேண்டும்உடனே அவனை இங்கு 
கொண்டுவாரும் என்று அமைச்சருக்கு ஆணையிட்டான்.
அமைச்சர் சென்று மன்னன் ஆணையை கூறஅஞ்சுதல்  இல்லா அடிகள் 

 
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
               நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
                இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
                சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
                கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.
என்று பாடினார்.அமைச்சர்கள் அவர் அடிமலர் தொழுது 
கருணைகூர்ந்து எம்முடன் வரவேண்டும் என்று  வேண்டினார்கள் .ஆளுடைய அரசு  இங்குவரும்  வினைகளுக்கு எம்பிரான் துணையுள்ளான் என்று 
அவர்களுடன் சென்றார்
                                                                                          தொடர்ச்சி 2இல்
                                  போற்றி ஓம் நமசிவாய 
                                        திருச்சிற்றம்பலம்       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக