rudrateswarar

rudrateswarar

Saturday, April 6, 2013

வாழ்க்கை இடர் தீர

                                                                 ஓம் நமசிவாய

வாழ்க்கை இடர் தீர

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளியது முதல் திருமுறை 52ஆம் பதிகம்

                                    திருச்சிற்றம்பலம்



மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களமே யவனே.                    1


கனைத்தெழுந்த வெண் திரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களமே யவனே.                2


நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார்  இடர்களையாய் நெடுங்களமே யவனே.                            3


மலைபுரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால்  மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களமே யவனே.                       4 


பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் தாள் நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களமே யவனே.                         5


விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய  ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்களமே யவனே.                          6


கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களமே யவனே.                      7


குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தி இராப் பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களமே யவனே.                      8


வேழவெண்கொம்பு  ஒசித்தமாலும் விளங்கியநான் முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதியுள்  ஆகி நின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் அடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களமே யவனே.                    9


வெஞ்சொல் தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியரும்  தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களமே யவனே.          10


நீடவல்ல வார்சடையான் மேய நெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.                                  11



இந்தப் பதிகத்தை நாள் தோறும் ஓதி வர  வாழ்க்கையில் ஏற்படும் இடர்கள் இடைஞ்சல்கள் கஷ்டங்கள் சங்கடங்கள் அனைத்தும் 
விலகி ஓடிவிடும் இது பலரை  வாழ்வில் பல  நேரங்களில் காப்பாற்றியஅற்புத பதிகம் நமக்காக
இறைவனால் கொடுக்கப்பெற்ற அற்புத  தமிழ் பதிகம் ஓதுவோம் பயன் பெறுவோம்.

                                                             திருச்சிற்றம்பலம்       

                                                      போற்றி ஓம் நமசிவாய 


                                                        திருச்சிற்றம்பலம்        

No comments:

Post a Comment