rudrateswarar

rudrateswarar

Tuesday, April 2, 2013

சிவசுப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சி

                                                            
                 ஓம் நமசிவாய


சிவசுப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சி 


நம்மில் இன்னும் பலருக்கு சிவபெருமானுக் குரிய திருப்பள்ளியெழுச்சி எனும் சிவசுப்ரபாதம் இருப்பதையே அறியாமல் உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இரவில் தூங்கி காலையில் நாம் துயில் எழுவது யாரால் நடைபெறுகிறது? நாமென்ன செய்து வைத்த எந்திரமா? இல்லையே நம்மை இயக்கும் அந்த ஆதியும் அந்தமும் இல்லா பரம் பொருளுக்கு காலையில் எழுந்ததும் நன்றி சொல்லும் விதமாக திருப்பள்ளியெழுச்சி பாடுவோமாக

              
                      திருச்சிற்றம்பலம் .


போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
           புலர்ந்ததுபூங்கழற்கிணைதுணைமலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
           எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
           திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
           எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே




அருணண்இந்திரன்திசைஅணுகினனிருள்போய்
             அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
             கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
             திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
            அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.




கூவின பூங்குயில் கூவின கோழி
          குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
          ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
          திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
          எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.




இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்
            இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
            தொழுகையர் அழுகையர் துவள்கையர்ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
            திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
             எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.



பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
           போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
           கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
            சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
             எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.




பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
           பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின்
           வணங்குகின்றார் அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
           திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
            எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.





அது பழச்சுவையென அமுதென அறிதற்கு
           அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
            எங்களை ஆண்டுகொண்டு இங் கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
            மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு ஆறது கேட்போம்
            எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே.





முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
            மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் னடியார்
             பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
            திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
           ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே.




விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
                விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
                வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
                கடலமுதே கரும்பே விரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
                எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே.




புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
            போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
            திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
             படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
            ஆரமு தேபள்ளி எழுந்தருளாயே.



வேங்கடேச சுப்ரபாதம் மட்டுமே சுப்ரபாதம் அல்ல நம் தமிழில் அழகான திருப்பள்ளி எழுச்சி சிவபெருமானுக்கு மாணிக்கவாசக சுவாமிகளால் அருளப்பெற்றது


சிவாலயங்களில் தினமும் காலையில் இந்த பதிகத்தை ஒலிக்க செய்ய வேண்டும் வீடுகளிலும் திருப்பள்ளியெழுச்சியை  பாடி எல்லா நலமும் வளமும் பெற எல்லாம் வல்ல அந்த ஈசன் அருளட்டும். இணையத்தில் பதிகக் குரலிசையை பதிவிறக்கம் செய்யலாம். வேண்டுவோருக்கு காபி (copy ) செய்து கொடுக்கலாம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிந்தனையும்
செயலும் நன்றாக வர பிரார்த்திப்போம்

              போற்றி ஓம் நமசிவாய 

                   திருச்சிற்றம்பலம்   





No comments:

Post a Comment