rudrateswarar

rudrateswarar

Thursday, April 18, 2013

திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்

                                       ஓம் நமசிவாய


திருக்குறிப்புத்தொண்டர் நாயனார்
                                                  புராணம்

  "திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்"


குரு பூசை திருநட்சத்திரம்-சித்திரை சுவாதி 
அவதார தலம்-திருக்கச்சி எனும் காஞ்சி 
முக்தி தலம்    -திருக்கச்சி எனும் காஞ்சி

26-04-2013-வெள்ளிக்கிழமை 

அகில உலகத்தையும் ஈன்ற  அன்னை உமாதேவியார் இறைவனை வழிபடும் பொருட்டு தன்னிடத்தே வந்து தவம் செய்ய மாதவம் செய்த நாடு தொண்டை வளநாடு.குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் பாலை என ஐவகை நிலங்களையும்  தன்னுள்ளடக்கிய எழில் கொஞ்சும் சிவமயமான நன்னாடு .இப்படி எல்லா வளங்களும் பொருந்திய தொண்டை நாட்டின் தலைநகர் காஞ்சிமாநகரம் எனும் புண்ணிய பூமி 

அந்த புண்ணிய பூமியாகிய காஞ்சீபுரத்தில் வாழ்ந்தவர் திருக்குறிப்பு தொண்டர் நாயனார் .அவர் ஏகாலியர் குலத்தில் அவதரித்தவர் .அன்பு நிரம்பிய மனத்தினர் .சிவநெறி நின்ற சீலர் .ஆலமுண்ட அண்ணலின் திருவடிகளில் வழிவழியாக தொண்டு புரிபவர் .அடக்கமும் வாய்மையும் தூய்மையும் உடையவர் .மனத்தினால் இறைவருடைய இணையடித் தாமரைகளை இடையறாது சிந்தித்து ஐந்தெழுத்தை நினைந்து உருகுவார் .வாக்கினால் சிவமூர்த்தியின் திருநாமம் கூறி துதிப்பார் . காயத்தினால் (உடல்) இறைவரை வணங்கி அரனாருக்கும் அரனாரது அடியார்க்கும் தொண்டு புரிவார் 

புண்ணிய உருவங்களாகிய திருதொண்டர்களது குறிப்பறிந்து தொண்டு செய்யும் தன்மையில் உறுதி கொண்டவராக ஒழுகியபடியினால் இவர் 
திருக்குறிப்புத் தொண்டர் என்னும் திருநாமம் பெற்றார் 

இவர் பிறப்பால் ஏகாலியர் என்றாலும் ஊரவர் துணி துவைக்கும் பொது வண்ணார் என்று கூற இயலாது . திருத் தொண்டர்களது ஆடைகளைக் குறிப்பறிந்து துவைத்துக் கொடுக்கும் சிறப்புடையவர் . சிவனடியார்களது உடை அழுக்கை துவைத்து  அகற்றுவதுபோல தன்னுடைய பழவினைகளையும் 
மும்மலங்களையும் பிறவிப்பிணியின் அழுக்கையும் 
அகற்றுவாராயினர் .இவருடைய ஒப்பிலாத அன்பை
அளக்க அன்று எம்பெருமான் திருஉள்ளம் கொண்டார் 

குளிர் மிகுந்தகாலத்தில் வறியவர் போல் 
அழுக்கடைந்த கந்தையுடன் மாலறியா மலரடிகள்  மண் மேல் பட நடந்து திருத்தொண்டர்பால்  வந்தருளினார் அவர் மேனி முழுதும் திருநீறு ஒளி 
செய்ய எழுந்தருளி வரும் அவரை திருக்குறிப்புத்
தொண்டர் கண்டு அளவற்ற மகிழ்ச்சி கொண்டு 
எதிர் சென்று மண்மீது விழுந்து பணிந்து எழுந்து 
எந்தையே தாங்கள்இங்கு எழுந்தருள அடியேன்  
செய்த தவமோ?என் குலம் செய்த தவமோ?என் முன்னோர் செய்த முடிவிலாத்தவமோ? நானே தவமுடையேன் பிறவிபெருங்கடலினின்று 
கரையேறினேன் என்று கூறி மேலும் தாங்கள் 
திருமேனி இளைத்திருக்கின்றீர் காரணம் யாதோ? கந்தையினை தந்தருளும் கசக்கி தருவேன் என்றார்
இறைவர்  அன்பனே இக்கந்தை மிகவும் அழுக்கேறி 
உடுக்க முடியாத நிலையில் உள்ளது ஆனால் 
குளிரின் கொடுமையால் இதைவிட  முடியவில்லை  மேற்கே சூரியன் மறையும் 
முன் இதனைத்தருவீராகில் கொண்டுபோய் 
தோய்த்து வாரும் என்றார்.அவ்வாறே செய்வதாக 
கூறி கந்தையை  பெற்றுக்கொண்டு போய் குளத்தில் 
தோய்த்து புழுங்க வைத்தார் 
மீண்டும் துவைக்க முயலும்போது கண்ணுதற் 
கடவுளின் கருணையினால் மழைவிடாமல்  பெய்தது . நாயனார் மனம் உடைந்தார் வருந்தினார். 
குளிரால் வருந்தும் தூய முனிவரிடத்தில் என் 
குற்றேவல் தவறிவிட்டதே என்று மயங்கி 
வீழ்ந்தார் .இறைவரிடம் வாக்கு கொடுத்த கால 
எல்லை கடந்தது 

சிறியேன் இப்படி நிகழும் என்று அறியேன் .
முன்னமே துணியை தோய்த்து வீட்டில்
கொண்டுபோய் உலர்த்தி இருக்கவேண்டும் சிறந்த 
தவமுனிவரது திருமேனி குளிரால்துன்புறுமாறு 
தீங்கு இழைத்த எனக்கு இனி வேறு என்ன செய்ய  இருக்கின்றது? செய்யதக்க ஒன்று இதுவே  கந்தையைத் தோய்ப்பதற்கு ஏற்றுகின்ற பாறையின்மீது தலை சிதறுமாறு மோதுவேன் 
என்று துணிந்தார் 
பாறையின்மீதுவேகமாக தமது தலையை 
புடைக்கப் புகுந்த போது பாறைக்கு அருகில் 
இறைவருடைய திருக்கரம் தோன்றி அவருடைய 
தலையை  தாங்கி கொண்டது 

நாயனாரின் உண்மையான அன்புக்கு விடைமேல் 
உமையம்மையுடன் காட்சி தந்தருளினார்  முக்கண்பரமன் .இறைவர் நாயனாரை நோக்கி  உனது அன்பின் திறத்தை மூவுலமும் 
அறியச்செய்தோம் நீ நமது சிவலோகத்தில் 
நம்முடன் பிரியாது இருந்து இன்புறுவாய் என்று திருவாய்  மொழிந்தருளினார்

இப்படியும் இறைவர்பால்ஒருவர்  அன்பு  வைக்கமுடியுமா? என்று நினைக்கும் அளவுக்கு அன்பு கொண்டிருந்தார் திருக்குறிப்புத்தொண்டர் 
நாயனார் அந்த மாறா அன்பு அவருக்கு இறைவரை 
நீங்காத பேறு  பெற்றுக்கொடுத்தது



                                 திருச்சிற்றம்பலம்



                         போற்றி ஓம் நமசிவாய     

    `
  

                         





 


No comments:

Post a Comment