rudrateswarar

rudrateswarar

Saturday, April 13, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை - 8

                                  ஓம் நமசிவாய 


ஐந்தெழுத்தின் மேன்மை - 8

  
திருமுறை. 4 பதிகம் 77 பாடல் 4



சந்திரற் சடையில் வைத்த
            சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மான் 
           ஆன் வெள் ளூர்தி யான்றன்
மந்திர நமச்சி வாய
           ஆகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும்  நோயும்
           வெவ்வழல் விறகிட் டன்றே.


பிறையைச் சடையில் சூடிய சங்கரன்   
சாம வேதம் ஓதுபவர் தேவர் தலைவர்   வெண்ணிறக் காளையை  வாகனமாய் உள்ளவர் திருவைந்தெழுத்தாகிய  நமசிவாய என  ஓதி திருநீற்றை அணிய நெருப்பில் இடப்பட்ட விறகு போல  நோய்களும் வினைகளும் வெந்து அழியும்.



திருமுறை 4 பதிகம் 80பாடல் 4
  தலம் -கோயில்


வைச்ச பொருள் நமக் காகுமென்று 
             எண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தேன் அணிதில்லை 
            அம்பலத் தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி
           உந்தியின் மேலசைத்த
கச்சி னழகுகண் டாற்பின்னைக்
          கண்கொண்டு காண்பதென்னே.


நமசிவாய என்னும் 
திருவைந்தெழுத்தாகிய  ஒண்பொருளானது  பிற்காலத்திற்கு சேர்த்து வைக்கும் சேமநிதி   என்று எண்ணித் தியானித்தேன்     அச்சம் ஒழிந்தேன். திருவைந்தெழுத்துக்கு 
உரியவரான  தில்லை  சிற்றம்பலத்தில்  கூத்தாடுகின்ற ஈசன் பித்தராகவும்  பிறப்பற்றவராகவும்  விளங்குபவர் நந்தி என்னும் திருநாமம் உடையவர் உந்தியின் மீது அழகிய கச்சு அணிந்தவர்  அப்பெருமானுடைய அழகைக் கண்ட கண்  காண வேண்டிய உயர்ந்த பொருள் யாது உ ள்ளது                


திருமுறை 4 பதிகம் 103 பாடல் 3
திருநாகைக் காரோணம்


தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
             வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த
            கடல்நாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவாய
            என்னும் மஞ்செழுத்தும்
சாம் அன்றுரைக்கத் தருதிகண்
           டாய் எங்கள் சங்கரனே.



தூய மென் மலர் அம்புகளைக் கணையாக தொடுத்து  எய்த மன்மதனை  சாம்பலாக்கிய  ஈசனே  நாகைக்காரோணத்தில் மேவும் சங்கரனே ! உன் திருநாமமாகிய  நமசிவாய என்ற திருவைந்தெழுத்தை அடியேன் உயிர்போகும் பொழுது உரைக்கும் பேற்றினை நல்குவீராக .             



திருமுறை 5 பதிகம் 90 பாடல் 2                  


நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.


நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தானது 
இறைவனுடைய திருவடி மலராகத் திகழ்ந்து 
ஞானத்தையும்  கல்வியையும் வித்தை யையும் நல்கும் சிறப்புடையது.   நமசிவாய  என்று நா கூறியும் உள்ளம் வழிபட்டும்  இருக்கும்.  நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும். 



திருமுறை 5 பதிகம் 97 பாடல் 22                 


நமச்சி வாயவென் பார் உளரேல் அவர்
தமச்சம்  நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக்கொண்டதோர்வாழ்க்கைய
னாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே.  

நமசிவாய என்று சொல்லும் அடியார்கள் தம் அச்சங்கள் நீங்கித் தவநெறியைச் சார்ந்து  விளங்குபவர் ஆவர்  தானே அமைத்துக் கொண்ட ஒப்பற்ற வாழ்க்கையை உடையவர்  ஆகிலும்  மீண்டும் பிறக்கின்ற தன்மையை  பெறமாட்டார்கள்   


திருமுறை 6 பதிகம் 93 பாடல்10                



தந்தையார் தாயா ருடன்பி றந்தார்
             தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
            மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின்
            திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
            என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே

தந்தை தாய்  உடன் பிறந்தார் தாரம் புத்திரர் தான் என தொடர்புடையவர் வந்த விதம் யாது? போகும் வழி யாதோ?  எனவே  நிலையில்லாத இத்தன்மையில்  மகிழ வேண்டாம். உமக்கு ஓர் உறுதி சொல்லக் கேண் மின். ஒளிவீசும் மதியும் கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் முடியை உடைய எந்தை ஈசனின் திருநாமம்  நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தாகும்  அதை உரைத்து எத்துக வீடுபேற்றை  அடையலாம்.
 

திருமுறை 6 பதிகம் 98 பாடல் 4   
                                                            

உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
             உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
             நன்மையாய்ச்சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
             நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
            சுடர்நயனச்சோதியையே தொடர்வுற்றோமே.


சிவனடியார்கள் எம் உறவினர் ஆவர். கோவணமும் கீளும் உடுத்தியவர்கள்.  பகைவரும் தாக்க மாட்டார்கள். பிறர் செய்யும் தீமையும் நன்மையை  விளையும் தேன் நிறைந்த கொன்றை மாலையணிந்த சிவபெருமானுடைய நமச்சிவாய மந்திரத்தை சொல்ல வல்லவர்கள் அவர்கள் .மீனக்கொடியுடைய   மன்மதனை எரித்து  சாம்பலாக்கிய  நெற்றிக் கண்ணுடைய ஈசனையே 
தொடர்ந்தவர்கள்  ஆவார்கள்



                                  திருச்சிற்றம்பலம் 



                            போற்றி ஓம் நமசிவாய


சிவனடிமைவேலுசாமி 

No comments:

Post a Comment