rudrateswarar

rudrateswarar

Thursday, April 11, 2013

ஐந்தெழுத்தின் மேன்மை -3

                                  ஓம் நமசிவாய


ஐந்தெழுத்தின் மேன்மை-3


ஆறாம்திருமுறை பதிகம் 50  பாடல் 4
தலம்- திருவீழி மிழலை


தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்
சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை
வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.


 

தூய பவளத்தின் ஒளியையுடைய  எல்லா உயிர்களுக்கும் துணையாக நின்று  தாயாய்த் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய், அனைவருக்கும் நன்மை செய்பவனாய்ச் சந்தோக சாமம் ஓதுபவனாய், சிவமந்திரங்களை செபம் செய்பவர் மனத்துள் உறைபவனாய்த் திருவைந்தெழுத்தின் பயனைத் தெளியாது ஐயுற்று ஓதுபவர் களுக்கு எட்டாதவனாய்  உள்ள திருவீழிமிழலை இறைவனைச் சேராதார் தீய நெறியில்  செல்பவரே 


ஆறாம் திருமுறை பதிகம் 64 பாடல் 9
தலம் - திருக்கச்சி ஏகம்பம்
   
வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்கு
வஞ்சன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்று மாகிப்
பரந்தவன்காண்படர்சடையெட்டுடையான்தான்காண் 
பங்கயத்தோன் தன்சிரத்தை யேந்தி யூரூர்
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.
 

மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய், அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர் களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய்,  வானுலகும் மண்ணுலகும்  மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய், திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய், பிரமனின் கபாலத்தைக் கையிலேந்தி , ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய், உள்ள எழிலும் பொழிலும்  ஒருங்கே பெற்ற கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே. 

ஆறாம் திருமுறை பதிகம் 66 பாடல் 6
தலம் -திருநாகேச்சரம் 


துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்
தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த
நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி
நிற்பனவும் நடப்பனவு மாயி னானை
மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை
அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ்
சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.



அறம் விரும்பா குற்றமுடையோரை நீங்கியவனாய், தேவர்களின் பல  புகழ்ச்சிக்கு உகந்தவனாய்,நிறைந்தவனாய், ஐம்பூதங்களாயும் அண்ட சராசரமும் ஆகியவனாய், தன்னைத் தியானிக்காத வஞ்சர்களை மறந்தவனாய்  திருவைந்தெழுத்தை ஓதுபவர்களுக்கு எக்காலத்தும் சிறந்து உதவுபவனாய், திருநாகேச்சரத்தில் உறையும் இறைவனைச் சேராதவர்கள் நன்னெறியை  சேராதவர்களே ஆவர் .



ஆறாம் திருமுறை பதிகம் 95 பாடல் 6 பொது 



திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.


திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் செப்பாதவரும் ,சிவனாருடைய இயல்பை ஒருகாலும் பேசாதவரும் , திருக்கோயிலினை  ஒருகாலும் வலம் வராதவரும் , உணவருந்தும் முன் மலர்  பறித்து இறைவனுக்கு சாற்றியபின் உண்ணாதவரும், கொடுநோய்கள் கெட திருநீற்றைஅணியாதவரும்,இதையெல்லாம்   செய்யாதாவரெல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவர்களே . அவர்கள் பிறந்ததே தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செத்து அதுவே தொழிலாகி இறக்கின்றார்கள் .
                                      
                                  திருச்சிற்றம்பலம்
                              போற்றி ஓம் நமசிவாய 


சிவனடிமைவேலுசாமி                 


            
            

No comments:

Post a Comment